செங்கல்பட்டு ஜன, 9
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் பொங்கல் பண்டிகைக்கான ரொக்க பரிசு உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கும் பணிகளை கண்காணிப்பதற்காக, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் ஒவ்வொரு வட்டத்துக்கும் வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளடக்கிய நடமாடும் கண்காணிப்பு குழுவும் நியமிக்கப்பட்டு உள்ளது. பொங்கல் பரிசுகளை வழங்கும் போது, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல்களை தவிர்ப்பதற்காக நாள் ஒன்றுக்கு 200 முதல் 250 குடும்ப அட்டை தாரர்களுக்கு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் குடும்ப அட்டையில் இடம் பெற்றுள்ள உறுப்பினர்கள் யார் வேண்டுமானாலும், பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணத்தை ரேஷன் கடைகளில் பெற்று கொள்ளலாம். பொங்கல் பரிசு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டதும் பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு குறுஞ் செய்தி அனுப்பப்படும். இது தவிர பொங்கல் பரிசு மற்றும் ரொக்க பணம் வழங்கும் பணிகளை கண்காணிக்கவும், பொது மக்கள் புகார்களை தெரிவிப்பதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது.