Spread the love

கேரளா ஜன, 7

தர்மபுரி பகுதியை சேர்ந்த பத்மா என்ற பெண் கேரளா மாநிலம் கொச்சி பகுதியில் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்தார்.

பத்மா, நீண்ட நாட்களாக உறவினர்களுடன் பேசவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கேரளா சென்று அவரை தேடினர். இதில் பத்மா, அதே பகுதியை சேர்ந்த முகமது ஷபி என்பவரால் கடத்தி செல்லப்பட்டது தெரியவந்தது.

போலீசார் முகமது ஷபியை பிடித்து விசாரித்தனர். இதில் முகமது ஷபியும், பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த மந்திரவாதி பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோர் சேர்ந்து நரபலி கொடுத்தது தெரியவந்தது. பத்மாவுடன் கொச்சி பகுதியை சேர்ந்த ரோஸ்லி என்ற பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து காவல் துறையினர் முகமது ஷபி, பகவல் சிங் மற்றும் அவரது மனைவி லைலா ஆகியோரை கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் நரபலி கொடுக்கப்பட்ட தர்மபுரி பெண் பத்மா, ரோஸ்லி ஆகியோரின் உடல் பாகங்களை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து கைதான 3 பேரையும் சம்பவம் நடந்த வீட்டிற்கு அழைத்து சென்று காவல் துறையினர் ஆதாரங்களை திரட்டினர். மேலும் அவர்கள் வீட்டின் பிரிட்ஜ்ஜில் இருந்த மனித மாமிசத்தையும் கைப்பற்றினர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர். ஜெயிலில் அடைக்கப்பட்ட 3 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்க கோரி கோர்ட்டில் மனு செய்தனர். அதனை கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில் கைதான 3 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய காவல் துறையினர் நடவடிக்கை எடுத்தனர். முதற்கட்டமாக தர்மபுரி பெண் பத்மா நரபலி வழக்கில் 200 பக்க குற்றப்பத்திரிகையை காவல் துறையினர் தயாரித்து உள்ளனர். பெரும்பாவூர் கோர்ட்டில் இன்று இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *