ஈரோடு ஆகஸ்ட், 11
தபால் துறையை தனியார் மயமாக்குவதை கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் தபால் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தபால் துறையை தனியார் மயமாக்கும் முடிவை கைவிட வேண்டும் உள்பட மொத்தம் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அஞ்சல் ஊழியர் சங்கம் உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தது.
அதன்படி நாடு முழுவதும் தபால் துறை ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள தலைமை தபால் அலுவலகங்கள், துணை தபால் அலுவலகங்கள், கிளை தபால் அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பலர் பணிக்கு வரவில்லை. இதனால் தபால் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டன. தபால் அலுவலகங்கள் திறக்கப்பட்டு இருந்தாலும், ஒரு சில ஊழியர்கள் மட்டுமே பணியாற்றியதால் வெறிச்சோடி காணப்பட்டது.