நெல்லை டிச, 31
நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு இடங்களில் முருங்கைக்காய் பயிரிடப்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலும் கிணற்று பாசனத்தை நம்பியே பணிகள் நடைபெறுகிறது.
தற்போது மகசூல் இறுதிக்கட்டத்தில் உள்ளது. இதனால் சந்தை களுக்கு வழக்கத்தை விட மிகவும் குறைந்த அளவே முருங்கைகாய் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாகவே முருங்கைக்காயின் விலை படிப்படியாக உயர்ந்து வருகிறது.
அதன்படி கடந்த 2 நாட்களாக நெல்லை, பாளை மார்க்கெட்டுகளில் கிலோ ரூ.100 க்கு விற்கப்பட்ட முருங்கைக்காய் இன்று 2 மடங்கு விலை உயர்ந்து ரூ.200க்கு விற்கப்பட்டது.
இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறியதாவது:-
வழக்கத்தை விட தற்போது முருங்கைக்காய் விளைச்சல் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இன்னும் சில நாட்களில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. வரத்து குறைந்து தேவை அதிகரித்ததின் காரணமாக முருங்கைக்காய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் முருங்கைகாய் விளைச்சல் போதிய அளவில் இல்லாததால் வெளி மாவட்டங்களில் இருந்து விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. அதன்படி ஒட்டன்சத்திரம் பகுதியில் இருந்து முருங்கைக்காய்கள் நெல்லைக்கு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது.
கடந்த சில நாட்களாக ஏறுமுகத்தில் இருந்த முருங்கைக்காய் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.
ஒரு கிலோ முருங்கைக்காய் ரூ.200-க்கு விற்பனையாகிறது. வரும் நாட்களில் தேவை அதிகரிப்பின் காரணமாக முருங்கை உள்ளிட்ட காய்களின் விலை மேலும் உயரும் என அவர் தெரிவித்தார்