சேலம் டிச, 25
மகுடஞ்சாவடி யூனியனுக்கு உட்பட்ட கன்னந்தேரியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடந்த ஆண்டை போன்று இந்த ஆண்டும் பொங்கல் பரிசாக கரும்பை அரசு அறிவிக்கும் என்ற நோக்கில் பெருமளவில் விவசாயிகள் கரும்பை பயிர் செய்தனர். ஆனால் இந்த ஆண்டு அரசு அறிவித்த பொங்கல் பரிசில் கரும்பு இடம்பெறாததால் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
பெருமளவில் முதலீடு செய்து ஓராண்டாக வளர்த்தும் உரிய விலை கிடைக்காது என்ற ஆதங்கத்தில் பொங்கல் பரிசு உடன் கரும்பை அரசு அறிவிக்க கோரி இந்த மறியல் போராட்டம் நடைபெற்றது. இதை தொடர்ந்து விவசாயிகளிடம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். கோரிக்கை குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்ததின் பேரில் விவசாயிகள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.