Spread the love

தேனி ஆகஸ்ட், 10

முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 5 ம் தேதி அணையின் நீர்மட்டம் 137.50 அடியை எட்டிய நிலையில், ‘ரூல் கர்வ்’ விதிப்படி அணையில் இருந்து கேரளாவுக்கு உபரிநீர் திறக்கப்பட்டது. நேற்று வினாடிக்கு 7,354 கன அடி வீதம் கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில், தொடர்ந்து 5 வது நாளாக இன்றும் கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 139.55 அடியாக இருந்தது. உபரிநீர் அதிகரிப்பு அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரத்து 451 கன அடியாக இருந்தது.

தமிழகத்துக்கு வினாடிக்கு 2144 கன அடி நீர் திறக்கப்பட்டது. அணையில் 7012 மில்லியன் கன அடி நீர் இருப்பு இருந்தது. உபரிநீராக கேரள பகுதிக்கு வினாடிக்கு 7560 கன அடி வெளியேற்றப்பட்டது.

தொடர்ந்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் காலை 9 மணியளவில் வினாடிக்கு 8626 கன அடி உபரிநீர் வெளியேற்றப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் நீர்வரத்து வினாடிக்கு 11 ஆயிரம் கன அடிக்கு மேல் இருந்ததால், உபரிநீர் வெளியேற்றும் அளவு வினாடிக்கு 10 ஆயிரத்து 400 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.

நீர்வரத்து அதிகரித்து, கேரளாவுக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், முல்லைப்பெரியாறு அணையில் மதுரை பெரியாறு-வைகை வடிநில வட்ட கண்காணிப்பு பொறியாளர் தலைமையில் தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதற்காக தேக்கடியில் இருந்து படகு மூலம் அணைக்கு சென்றனர். பிரதான அணை, பேபி அணை, சுரங்கப்பகுதி, டிஜிட்டல் நீர்மட்ட அளவீடு அறை, உபரிநீர் வெளியேறும் மதகுகள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் சுரங்கப்பகுதியில் கசிவுநீர் அளவை கணக்கிட்டனர். ஆய்வின்போது, அணையின் செயற்பொறியாளர் சாம்இர்வின், பெரியாறு & வைகை கோட்டப் பொறியாளர், உதவி செயற்பொறியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *