சேலம் டிச, 21
ஓமலூர் அருகேயுள்ள கோட்டை மாரியம்மன்கோவில் ஊராட்சியில் காமாண்டப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி, அரசு தொடக்கப்பள்ளி, வட்டார வள மையம் ஆகியவை செயல்பட்டு வருகிறது.
மேலும், இந்த கிராமத்தின் வழியாக ஓமலூர் நகர், 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள், மேட்டூர் பிரதான சாலை உட்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்ல முடியும். அதனால், இந்த கிராமத்தின் வழியாக சென்ற ரயில்வே தண்டவாளத்தின் குறுக்கே ரயில்வே தரைப்பாலம் கட்டப்பட்டது.
இந்தநிலையில், நடப்பு ஆண்டு முழுவதும் தொடர்ந்து பெய்த மழைக்கு, ரயில்வே தரை பாலத்தில் மழைநீர் குளம்போல தேங்கி நிற்கிறது. அதேபோல அங்குள்ள மயானத்திலும் தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
அதனால், ரயில்வே தரைப்பாலம் மற்றும் மயானத்தில் தேங்கியுள்ள தண்ணீரை நிரந்தரமாக அகற்றவும், காலம் காலமாக தண்ணீர் சென்ற கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து காமாண்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த மக்கள் ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலா முத்துகுமார் தலைமையில் ஓமலூர் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.