கடலூர் டிச, 10
மாண்டஸ் புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வழக்கத்தை விட மிக அதிக கன மழை பெய்யும். மேலும் பலத்த காற்று வீசப்படும் என்பதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே 42 புயல் பாதுகாப்பு மையங்கள், 191 தற்காலிக முகாம்கள் ஏற்படுத்தப்பட்டன.
இதனைத் தொடர்ந்து தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர் என 68 நபர்கள் கடலூர் மாவட்டத்தில் வந்தனர். இதனை தொடர்ந்து கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் மாண்டஸ் புயல் காரணமாக பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள், உணவுப் பொருட்கள் போன்றவற்றை வாங்கி பாதுகாப்பாக வீட்டில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
மேலும் மாவட்டம் முழுவதும் தீயணைப்பு துறையினர், மின்சாரத் துறையினர், ஊரக வளர்ச்சித் துறையினர், வருவாய்த்துறையினர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை மற்றும் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் 241 ரேஷன் கடைகளில் சுமார் 750 டன் அரிசி பேரிடர் காலத்தில் பாதுகாப்பு மையங்களில் தங்கப்பட உள்ள பொதுமக்களுக்கு பயன்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஏற்கனவே சேமிக்கப்பட்டு உள்ளது.