கடலூர் டிச, 8
தென் கிழக்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தென் கிழக்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.
மேலும் இது மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக மாறி வந்தது. இதையொட்டி இன்று தொடங்கி 3 நாட்களுக்கு அதிகனமழை பெய்ய வாய்ப்புஉள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி கடலூர் மாவட்டத்துக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று முன்தினம் அரக்கோணத்தில் இருந்து கமாண்டர் குல்ஜிந்தர்மூன் தலைமையில் 28 தேசிய பேரிடர் மீட்பு படையினர் வந்தனர். அவர்கள் கடலூர் குடிகாட்டில் உள்ள பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் நேற்று இந்த படையினர் 30 பேர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்கினர். தொடர்ந்து அவர்கள் சிதம்பரத்தில் முகாமிட்டு மழை வெள்ள பாதிப்பு ஏற்படும் போது, பாதிக்கப்படும் இடங்களுக்கு சென்று மீட்பு பணியில் ஈடுபட உள்ளனர்.