நெல்லை டிச, 9
நெல்லை டவுன் சேரன்மகாதேவி ரோட்டை சேர்ந்தவர் கணபதி விஜய். இவர் இன்று காலை தனது காரில் சென்று கொண்டு இருந்தார்.
மதுரை நான்கு வழிச்சாலை ராஜவல்லிபுரம்-குறிச்சிகுளம் பகுதியில் சென்ற போது திடீரென அவரது காரின் முன்பக்கத்தில் இருந்து புகைவந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த கணபதி விஜய் உடனடியாக காரை நிறுத்தி அதனை பார்வையிட்டார். அப்போது திடீரென கார் தீப்பற்றி எரிந்தது. தொடர்ந்து கார் கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. உடனடியாக பாளை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு உதவி மாவட்ட அலுவலர் வெட்டும்பெருமாள், நிலைய அலுவலர் ராஜா மற்றும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று காரில் பிடித்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து தண்ணீரை பீய்ச்சியடித்து கடும் போராட்டத்திற்கு பின்னர் தீ அணைக்கப்பட்டது. அதற்குள் கார் எரிந்து சேதமானது. காரில் திடீரென தீப்பிடித்தற்கான காரணம் என்ன என்பது இதுவரை தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. நான்குவழிச்சாலை பகுதியில் சென்ற கார் திடீரென தீப்பற்றி எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சிறிது நேரம் அங்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
ஜான் பீட்டர்.
செய்தியாளர்.
நெல்லை மாவட்டம்.