சேலம் டிச, 9
சேலம் 4 ரோடு அருகே பெரமனூர் பகுதியில் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரிய அலுவலகம் உள்ளது. இந்த அரசு அலுவலகம் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டி ஏழை, எளிய மக்களுக்கு குறைந்த விலையில் வழங்கப்படுகிறது. மேலும் மத்திய, மாநில அரசுகள் மூலம் வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பிரதம மந்திரியின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், ரூ.2 லட்சத்து 10 ஆயிரம் மானியத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வீடுகள் கட்டி தரப்படும் என ஆணைகள் வழங்கப்பட்டன.
இதற்காக ஏற்கனவே இருந்த வீடுகளையும் இடித்து பயனாளிகள் தயாராகினர். ஆனால் 6 மாதமாகியும் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளிடம் கேட்டால் முறையான பதில் அளிக்கவில்லை. இந்த நிலையில் இன்று 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அந்த அலுவலகம் முன்பு திரண்டனர். அதிகாரிகளை கண்டித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.