Spread the love

தாமரைக்குளம் ஆகஸ்ட், 9

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தலைமை தாங்கினார். இதில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 318 மனுக்கள் பெறப்பட்டன.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவா் அய்யாக்கண்ணு தலைமை தாங்கினார். மாநில செயலாளர் பாண்டியன், மாவட்ட செயலாளர் ராமலிங்கம் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது, திருமானூர் ஒன்றியத்தில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. அவற்றை நோய் தாக்கியுள்ளது. பருத்தி பயிர்களையும் வெள்ளைப்பூச்சி தாக்கி அழித்து வருகிறது. தற்போது, கொள்ளிடத்தில் வந்த வெள்ள நீராலும் அவை பாதிக்கப்படும் நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் வேளாண்மை துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மூலம் ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். பின்னர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

மேலும் செந்துறை அருகே உள்ள சோழன்குடிகாட்டை சேர்ந்த ஆதிதிராவிடர் மக்கள், பள்ளி மாணவர்களுடன், தொழிலாளர் விடுதலை முன்னணி மாநில துணைச் செயலாளர் அன்பானந்தம் தலைமையில் ஆட்சியரிடம் மனு அளிக்க ஆட்சியடர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், 10 பேர் மட்டுமே உள்ளே சென்று மனு அளிக்க கூறினர்.

இதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அனைவரையும் உள்ளே செல்ல அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தியும், முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் சுமார் 2 மணி நேரம் நீடித்தது. ஆனாலும் அனைவரையும் உள்ளே அனுமதிக்காததால் ஆத்திரமடைந்த மக்கள், காவல்துறையினரை கண்டித்தும், ஆட்சியர் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கூறியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து போலீசாரின் பேச்சுவார்த்தையை அடுத்து மறியலை கைவிட்டு மீண்டும் அலுவலக நுழைவு வாயிலில் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் குறை தீர்க்கும் கூட்டம் முடிந்த பின்னர் வெளியே வந்த மாவட்ட ஆட்சியர் ரமணசரஸ்வதி, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறி, அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *