அரியலூர் ஆகஸ்ட், 8
கீழக்காடு கிராமம் அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சிந்தாமணி ஊராட்சியை சேர்ந்த குக்கிராமம் கீழக்காடு. இங்கு 500 ஏக்கர் புஞ்சை நிலங்கள் உள்ளன. நிலக்கடலை, உளுந்து, பயிறு, எள்ளு, மக்காச்சோளம் போன்ற மானாவாரி பயிர்களும், சவுக்கு தைல மரம் உள்ளிட்ட மர பயிர்களும், வெண்டை, கொத்தவரை, கத்தரி, தக்காளி உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்களும் பயிரிடப்பட்டு வருகிறது.
இந்த பகுதிக்கு தா.பழூர்-ஜெயங்கொண்டம் சாலையிலிருந்து சிந்தாமணி பஸ் நிறுத்தம் பகுதி வழியாகவும், தா.பழூர் அன்னங்காரம்பேட்டை சாலையில் பிள்ளையார்குளம் கிராமம் வழியாகவும் ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன்பு மண் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து விவசாய பணிக்கு பயன்படுத்தப்பட்டு வரும் இந்த சாலை இதுவரை தார் சாலையாக அமைக்கப்படவில்லை. தார்சாலை அமைக்க கோரிக்கை கீழக்காடு பகுதியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களும் இந்த சாலையையே நீண்ட காலமாக பயன்படுத்தி வருகின்றனர். விவசாய நிலங்களுக்கு தேவைப்படும் விதைகள், உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களையும், விவசாய தளவாட பொருட்களையும் இந்த சாலை வழியாகவே விவசாயிகள் எடுத்து செல்கின்றனர். கரடு முரடான சாலையாக இருப்பதால் விவசாயத்திற்கு தேவையான பொருட்களை எடுத்து செல்லும் பொழுதும், விவசாய நிலங்களில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களை எடுத்து வரும் பொழுதும் விவசாயிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர். எனவே சிந்தாமணி பஸ் நிறுத்தம் முதல் கீழக்காடு வழியாக இடங்கண்ணி சாலையை இணைக்கும் வகையில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தரமான தார் சாலை அமைத்து கொடுப்பதின் மூலம் இப்பகுதியில் உள்ள விவசாயிகள் பெருமளவில் பயனடைவார்கள். அதுமட்டுமல்லாது அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்கள் இரவு நேரங்களில் கரடு முரடான சாலைகளில் இருசக்கர வாகனங்களில் வரும் பொழுது தவறி விழுந்து காயம் அடையும் சம்பவங்களும் அவப்பொழுது நடைபெற்று வருகிறது.
எனவே விவசாயிகளும், பொதுமக்களும் பயனடையும் வகையில் கீழக்காடு பகுதிக்கு தார் சாலை விரைவாக அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in