அரியலூர் ஆகஸ்ட் 11
மாவட்ட தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் நேற்று மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தா.பழூர் ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் ஆரோக்கியமேரி தலைமை தாங்கினார். ஒன்றிய பொறுப்பாளர்கள் பார்வதி, ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஆர்ப்பாட்டத்தை சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ராஜவேம்பு தொடங்கி வைத்தார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பள்ளிகளில் காலை சிற்றுண்டி உணவை சத்துணவு ஊழியர்கள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். சத்துணவு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
இதேபோல் ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட பொருளாளர் ஆனந்தவல்லி தலைமை தாங்கினார்.