தென்காசி டிச, 7
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கும் நேரடியாக சென்று அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். அதன்படி நாளை தென்காசி மாவட்டத்திற்கு வருகிறார்.
இதற்காக சென்னை எழும்பூரில் இருந்து இன்று மாலை பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் மூலமாக தென்காசிக்கு புறப்படுகிறார். நாளை காலை தென்காசி ரயில் நிலையம் வந்தடைகிறார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிவடைந்த பணிகளை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்த விழாவில் சுமார் 1 லட்சம் பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதனைத்தொடர்ந்து கடையநல்லூர் வழியாக விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்திற்கு புறப்பட்டு செல்கிறார். முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் நாளை முதல் முறையாக அவர் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.