Spread the love

ஈரோடு டிச,3
கனிமார்க்கெட் ஜவுளிச்சந்தையில் புதிதாக கட்டப்பட்டு உள்ள வணிக வளாகத்தை தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் சு.முத்துசாமி நேற்று ஆய்வு செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அவர் கூறியதாவது:

ஈரோடு மாநகராட்சியில் புறநகர் பஸ்கள் வந்து செல்ல சோலார் பகுதியில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. தென் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள் அங்கு நிறுத்தப்படும். இதேபோல் சத்தியமங்கலம், கோபி ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பஸ்களை நிறுத்துவதற்கு கனிராவுத்தர் குளம் பகுதியில் மற்றொரு பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக இடம் கையகப்படுத்த பேச்சுவார்த்தை முடிந்துவிட்டது. அரசின் நிதி ஒதுக்கீடு கிடைத்ததும் இடம் வாங்கப்பட்டு அங்கு பஸ் நிலையம் அமைக்கப்படும். எனவே ஒரே சமயத்தில் 2 தற்காலிக பஸ் நிலையங்கள் செயல்படும் வகையில் திட்டமிடப்பட்டு வருகிறது.

அத்திக்கடவு-அவினாசி திட்ட பணிகளை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. பணிகளில் காலதாமதம் ஏற்படுவதாக அ.தி.மு.க. சொல்வதில் எந்த அர்த்தமும் கிடையாது. 90 சதவீத பணிகள் முடிந்தபோதும் 10 சதவீத பணிகள் நடைபெறாமல் இருந்தது. இதற்காக விவசாயிகளிடம் கலந்துபேசி பணிகள் நடந்து வருகிறது. 90 சதவீத பணிகள் அ.தி.மு.க. ஆட்சியில் முடிந்திருந்தால் ஏன் விவசாயிகளிடம் பேசி மீதமுள்ள 10 சதவீதம் பணிகளை முடிக்கவில்லை.

மொடக்குறிச்சி பேரூராட்சியில் எந்த ஊழலும் நடைபெறவில்லை. அங்கு பா.ஜ.க.வினருக்கும், மற்றவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் சண்டையில் முடிந்து உள்ளது. சட்டப்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து உள்ளனர். பவானிசாகர் பகுதியில் சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்பட்டால் கழிவுநீர் வெளியேறும் என்று விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். தொழில் வளர்ச்சி இன்றியமையாதது. பல சாலை வசதிகள் உருவாக்கப்படும்.
விவசாயிகளின் குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கே அங்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.
நன்செய் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது.

பெருந்துறை பகுதியில் ரெயில்வே கூட்செட் அமைப்பதற்காக விவசாயிகள் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அதுதொடர்பாக ஆய்வு நடத்தப்படுகிறது. சென்னை கிளாம்பாக்கம் பகுதியில் மிகப்பெரிய புறநகர் பஸ் நிலையம் அமைக்கப்படுகிறது. அந்த பணிகளை வருகிற ஜனவரி மாதம் 15ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ., அமைச்சராக வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். எனவே எனக்கும் அந்த விருப்பம் உள்ளது. அதற்கு முழு ஆதரவு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *