கன்னியாகுமரி நவ, 2
அரசு பள்ளி தக்கலை அருகே உள்ள பத்மநாபபுரத்தில் கல்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. அந்த பள்ளி வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளிக்கூட கட்டிடம் சேதமடைந்ததால், அதை இடித்துவிட்டு அருகில் ஆஸ்பெக்டாஸ் கூரையிலான ஒரு கட்டிடத்தில் வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்த கட்டிடத்தின் மேற்கூரையும் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் மழைநேரங்களில் வகுப்பறைகளின் சாரல் விழுவதால் மாணவ-மாணவிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். எனவே பள்ளிக்கு நிரந்தர கட்டிடம் கட்ட வேண்டும் என பெற்றோர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை விடப்பட்டது.
இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் அப்போதைய பத்மநாபபுரம் துணை ஆட்சியர் அலர்மேல்மங்கை பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு நிரந்தர கட்டிடம் கட்டப்படும் என கூறினார். ஆனால், 3 மாதங்களாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்தநிலையில் நேற்று காலை மணியளவில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் விஜயநிர்மலா தலைமையில் பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் பள்ளியின் வாசல் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.