திருப்பத்தூர் நவ, 29
ஆம்பூர் நகராட்சியில் மொத்தம் 36 வார்டுகள் உள்ளன. திமுகவை சேர்ந்தவர் நகர மன்ற தலைவராக உள்ளார். இந்த நிலையில் ஆம்பூர் 21- வது வார்டு நதிசீலாபுரம் சாலை பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக உள்ளது. சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். இருப்பினும் நகராட்சி நிர்வாகம் சாலையை சீரமைக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டது.
நகராட்சி நிர்வாகத்தின் அலட்சிய போக்கை கண்டித்து நேற்று காலை தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து கட்சியை சேர்ந்த 21 கவுன்சிலர்கள் சேதம் அடைந்துள்ள சாலையில் மண் கொட்டி சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் அப்பகுதியில் குடிநீர் சரிவர வழங்கவில்லை எனக் கூறி அப்பகுதியை சேர்ந்த பெண்கள் காலி குடங்களுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். திமுக மற்றும் கூட்டணி கட்சி நகர் மன்ற உறுப்பினர்களும் சாலையை சீரமைக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் ஆம்பூரில் பரபரப்பையும், கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பையும் ஏற்படுத்தி உள்ளது.