ஊட்டி நவ, 27
குன்னூர் அருகே உலிக்கல் பேரூராட்சியில் செங்கல்கொம்பை பழங்குடியின கிராமம் உள்ளது. இங்கு காபி, குறுமிளகு போன்ற தோட்டக்கலை பயிர்கள் அதிகளவில் பயிரிடப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் அங்கு, குன்னூர் வட்டார தோட்டக்கலை துறை சார்பில் தேசிய மண் வள இயக்கத்தின் மூலம் மண் வளத்தின் முக்கியத்துவம் மற்றும் மண்வளத்தை பாதுகாப்பது குறித்து பயிற்சி முகாம் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டவர்களுக்கு காபி பயிரில் ஏற்படும் தண்டு துளைப்பானை இயற்கை முறையில் கட்டுப்படுத்துவது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இயற்கை முறையிலான விவசாயத்திற்கு பெருமளவில் வரவேற்பு உள்ளது.
அவ்வகையில் இங்கு விளைவிக்கப்படும் காபி மற்றும் குறுமிளகு எந்தவித ரசாயனங்களும் இன்றி இயற்கை முறையிலேயே விளைவிக்கப்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். எனவே அவர்களுக்கு அங்கக சான்றிதழ் வாங்கி பயன்படுத்த தோட்டக்கலைத்துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது.
மேலும் மண் மாதிரி எடுப்பது தொடர்பாக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் தோட்டக்கலை உதவி அலுவலர்கள், அட்மா திட்ட மேலாளர், தோட்டக்கலை அலுவலர், குன்னூர் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் மற்றும் பழங்குடியின விவசாயிகளும் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.