விழுப்புரம் நவ, 23
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விழுப்புரம் ஜானகிபுரம் சந்திப்பிலிருந்து புதுச்சேரி வரை 29 கி.மீ. நீளத்திற்கு தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் ரூ.1,013 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் ஜானகிபுரத்தில் 60 மீட்டர் நீளத்தில் 25 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருவதை நேற்று காலை மாவட்ட ஆட்சியர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது திருச்சி-சென்னை நெடுஞ்சாலையில் அதிகப்படியான வாகனங்கள் சென்றுவருவதால் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்திடும்பொருட்டு பணி நடைபெறும் இடத்தில் அறிவிப்பு பலகைகள் கூடுதலாக வைக்கவும், எதிர்வரும் வாகனங்கள் தெரியும் அளவிற்கு தற்போது வைக்கப்பட்டுள்ள தடுப்புகளின் அளவை குறைத்து குறைந்த உயரத்தில் தடுப்புகள் அமைக்கவும், வாகனங்கள் அதிவேகத்தில் செல்வதை கட்டுப்படுத்திடும்பொருட்டு தற்காலிகமாக சிறிய அளவிலான வேகத்தடைகள் வைக்கவும் அதிகாரிகளுக்கு ஆட்சியர் மோகன் உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிவசேனா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், நகரத் திட்ட இயக்குனர் சக்திவேல், திட்ட மேலாளர் குமரன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் பொற்கொடி உள்பட பலர் உடனிருந்தனர்.