திண்டுக்கல் நவ, 22
கர்நாடக மாநிலம் மங்களூருவில் நடந்த குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் காவல் துறையினர் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி ஆன்மிக நகரான பழனியில் பக்தர்கள், பயணிகள் அதிகம் வந்து செல்லும் ரயில்நிலையத்தில் ரயில்வே காவல் ஆய்வாளர் தூயமணி வெள்ளைசாமி, துணை ஆய்வாளர் பொன்னுசாமி ஆகியோர் தலைமையிலான காவல் துறையினர் தீவிர சோதனை செய்தனர்.
குறிப்பாக ரெயிலில் ஏறி பயணிகளின் உடைமைகளை மெட்டல் டிடெக்டர் கருவி கொண்டு சோதனையில் ஈடுபட்டனர். மேலும் நடைமேடை பகுதியில் நின்ற பயணிகளிடமும் சோதனை செய்யப்பட்டது. அப்போது சந்தேப்படும்படி யாரும் பயணித்தால் உடனடியாக ரெயில்வே காவல் துறையினர் தகவல் தெரிவிக்க வேண்டும் என பயணிகளுக்கு காவல் துறையினர் அறிவுறுத்தினர். தொடர்ந்து ரயில்நிலைய வளாக பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களையும் காவல் துறையினர் சோதனை செய்தனர்.