கிருஷ்ணகிரி அக், 31
கன்னட சினிமாவுலகில் கொடி கட்டி பறந்து, “பவர் ஸ்டார்” என அழைக்கப்பட்ட புனித் ராஜ்குமார், கடந்த ஆண்டு திடீரென மாரடைப்பால் உயிரிழந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனைத்து பகுதிகளிலும் அனுசரிக்கப்பட்டது. அதேபோல், கர்நாடக எல்லையருகே உள்ள ஓசூரிலும் புனித் ராஜ்குமார் ரசிகர்கள், அவரது நினைவு நாளை அனுசரித்தனர்.
இதையொட்டி, ஓசூர் அரசனட்டியில் நடந்த நிகழ்ச்சியில், புனித் ராஜ்குமாரின் பிரம்மாண்ட பேனர் மற்றும் உருவப்படம் வைத்து, மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் நலத்திட்ட உதவிகளாக, 4 சலவைத் தொழிலாளர்களுக்கு சலவைப் பெட்டிகள், மற்றும் 4 தொழிலாளர்களுக்கு தள்ளு வண்டிகள் இலவசமாக வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.