Spread the love

நெல்லை அக், 30

களக்காடு யூனியன் கூட்டம் நகர் மன்ற தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல் தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் விசுவாசம், ஆணையாளர் மங்கையர்கரசி முன்னிலை வகித்தனர்.

இதில் நகர் மன்ற உறுப்பினர்கள் ஜார்ஜ்கோசல், தமிழ்செல்வன், சத்ய சங்கீதா, விஜயலெட்சுமி, வனிதா, சங்கீதா மற்றும் யூனியன் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் நகர் மன்ற உறுப்பினர் தமிழ்செல்வன் பேசுகையில், களக்காடு வட்டார பகுதி விவசாயம் நிறைந்த பகுதி ஆகும். இங்கு சமீபகாலமாக கடமான், கரடி, யானை, காட்டுபன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. வனவிலங்குகளால் வாழை, நெல், தென்னை, பனை உள்ளிட்ட பயிர்கள் சேதமாகி வருகிறது.

இதற்கு இழப்பீடு வழங்க வேண்டிய வனத்துறையினர் வனவிலங்குகள் அட்டகாசத்தை மறைக்கவும், மக்களை திசை திருப்பவும் விவசாயிகள் மீது பொய் வழக்கு போடுகின்றனர். இது கண்டிக்கத்தக்கது. உயர் அதிகாரிகள் இதில் தலையிட்டு வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவார பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர் வாரி விளைநிலங்களுக்கு செல்ல பாதை ஏற்படுத்த வேண்டும். ஜெ.ஜெ, நகரில் மழைநீர் தேங்காத வண்ணம் முன் ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டெங்கு தடுப்பு பணிக்கு அதிக பணியாளர்கள் நியமிக்கப்படுவதால் பொதுநிதி வீணாகிறது என்றார்.

இதற்கு பதிலளித்த ஆணையாளர் மங்கையர்கரசி, “மருத்துவதுறையினரின் பரிந்துரையின் பேரிலும், மாவட்ட ஆட்சியர் உத்தரவின் படியும் தான் 20 பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். டெங்கு பரவல் குறைந்ததால் பணியாளர்களின் எண்ணிக்கையும் 8 ஆக குறைக்கப்படும்” என்றார்.

அதனைத் தொடர்ந்து ஜெ.ஜெ.நகரில் யூனியனுக்கு சொந்தமான 11 ஏக்கர் 64 செண்ட் நிலத்தை குத்தகை காலம் முடிந்த பின்னரும் யூனியனிடம் ஒப்படைக்காமல் உள்ளதால் யூனியனுக்கு இழப்பு ஏற்பட்டு வருவதை தடுக்க அந்த நிலைத்தை மீட்க நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *