திருவள்ளூர் அக், 26
தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி தினத்தன்று காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவில் 7 மணி தொடங்கி இரவு 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. எனினும் கட்டுப்பாடுகளின்றி பல்வேறு இடங்களில் நள்ளிரவு வரை பட்டாசுகள் வெடிக்கப் பட்டது. இதேபோல் திருவள்ளூர் மாவட்டத்திலும் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசுகள் வெடிக்கப்பட்டன.
இதையடுத்து மாவட்டத்தில் உள்ள 24 காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் நேர அனுமதியை தாண்டி பட்டாசு வெடித்ததாக 69 பேர் மீது 285வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கு பதிவு செய்யப்பட்டவர்கள் மீது நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீபாஸ் கல்யாண் தெரிவித்தார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் அதிக சத்தத்துடன் வெடி வெடித்ததும், அரசு விதித்த நேர கட்டுப்பாடுகளை மீறியதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், 20 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.