நெல்லை அக், 17
தமிழகம் முழுவதும் இந்த மாதம் கடைசி வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. நெல்லை மாநகர பகுதியிலும் மாநகராட்சி ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்பேரில் 4 மண்டலங்களிலும் வாறுகால் அடைப்புகள் சீரமைக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
தச்சை மண்டலத்துக்கு உட்பட்ட பகுதியில் உதவி ஆணையர் வெங்கட்ராமன் அறிவுறுத்தலின்படி சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மழைக்கால முன்னேற்பாடு பணிகள் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த பணியில் ஜேசிபி எந்திரம் மற்றும் 10-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டு பெரிய சாக்கடை ஓடைகளில் மரம், செடி கொடிகள் ஆகியவைகள் ஆக்கிரமித்து இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர். மேலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மழை நீர் வடிகால்களில் ஏற்பட்டுள்ள அடைப்பு கண்டறியப்பட்டு தூய்மைப்படுத்தப்பட்டது.