நெல்லை அக், 2
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள இடைச்சிவிளையை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மனைவி சுகன்யா. இவர்களுக்கு 3 வயது மற்றும் 4 வயதில் 2 குழந்தைகள் உள்ளனர்.கோயம்புத்தூர் மாவட்டம் காரணம்பேட்டையில் முத்துகிருஷ்ணன் பழைய இரும்பு கடை நடத்தி வருகிறார். இதனால் குடும்பத்துடன் அங்கு வசித்து வருகிறார். தற்போது தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா நடைபெற்று வருவதால் அதில் பங்கேற்பதற்காக சுகன்யாவை சொந்த ஊருக்கு செல்லுமாறு கூறி உள்ளார்.தொடர்ந்து சுகன்யா மற்றும் அவரது உறவினர் ஆகியோருக்கு ஆன்லைனில் தனியார் ஆம்னி பேருந்தில் முத்துகிருஷ்ணன் டிக்கெட் எடுத்துள்ளார். பின்னர் நேற்றிரவு சுகன்யா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு ஊருக்கு புறப்பட்டுள்ளார்.திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே ஆம்னி பேருந்து வந்தபோது அங்குள்ள ஓட்டலில் பயணிகள் சாப்பிட சென்றுள்ளனர். அப்போது பஸ்சில் இருந்த நடத்துனர், சுகன்யாவிடம் அவரது 3 வயது குழந்தைக்கு டிக்கெட் எடுக்குமாறு கூறி உள்ளார்.உடனே அவர் ஆன்லைனில் எனக்கு டிக்கெட் எடுத்துவிட்டோம். பின்பு எதற்காக குழந்தைக்கு டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுதொடர்பாக வாக்குவாதம் ஏற்படவே, கண்டிப்பாக டிக்கெட் எடுத்தாக வேண்டும். இல்லையெனில் பஸ்சில் இருந்து இறங்கிவிடுமாறு அவர் கூறி உள்ளார்.இதனால் அதிர்ச்சி அடைந்த சுகன்யா நள்ளிரவு நேரத்தில் வேறு வழியில்லாமல் பக்கத்து இருக்கையில் இருந்த பயணி ஒருவரிடம் பணம் கடனாக வாங்கி டிக்கெட் எடுத்துள்ளார். இந்த விபரத்தை தனது சொந்த ஊரில் உள்ள உறவினர்களிடம் அவர் கூறி உள்ளார்.இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் இன்று காலை திசையன்விளை அருகே உள்ள சண்முகாபுரத்தில் பஸ் வந்தபோது அதனை சிறைபிடித்தனர். அவர்கள் பஸ்சின் முன்பு அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்தினர். தகவல் அறிந்து அங்கு வந்த திசையன்விளை காவல் துறையினர் பேருந்தை பறிமுதல் செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். இதுதொடர்பாக ஓட்டுனர், நடத்துநரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.