நெல்லை அக், 1
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை தரிசனம் செய்வது சிறப்பு வாய்ந்தது. இந்த ஆண்டு புரட்டாசி மாதத்தின் 2வது சனிக்கிழமையான இன்று ஏராளமான பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
இதையொட்டி நெல்லை அருகே உள்ள மேல திருவேங்கடநாதபுரத்தில் தென் திருப்பதி என பக்தர்களால் அழைக்கப் படும் வெங்க டாஜலபதி கோவிலில் இன்று காலை முதல் சிறப்பு பூஜை, வழிபாடு நடைபெற்றது. இதில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர்.
இதேபோல் நெல்லை சந்திப்பு வரதராஜ பெருமாள் கோவில், பாளை ராஜகோபால சுவாமி கோவில், டவுன் கரியமாணிக்க பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு செய்தனர். டவுன் மேல மாடவீதியில் உள்ள லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் காலை 8.30 மணிக்கு திருமஞ்சனம், 10.30 மணிக்கு திருவாராதனம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு துளசி, துளசி தீர்த்தம், மஞ்சள் பொடி, குங்குமம் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது.
மேலும் அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில், காட்டுராமர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. இரவில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் கருட சேவை நடக்கிறது.
இதையொட்டி அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. நெல்லை புதிய பஸ்நிலையத்தில் இருந்து நவ திருப்பதி கோவில்களுக்கு 2-வது வாரமாக இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.