நெல்லை செப், 14
நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள கல்லிடைக்குறிச்சி காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு நடைபெற்ற கொலை வழக்கு தொடர்பாக கல்லிடைக்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து இருவரை கைது செய்த நிலையில் உடையார் மகன் இன்பராஜ் என்பவரை வழக்கு தொடங்கியதில் இருந்தே காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து பிடியாணையும் பிறப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரவணன் மேற்பார்வையில், அம்பை துணை காவல் கண்காணிப்பாளர் பிரான்சிஸ் வழிக்காட்டுதலின்படி கல்லிடைக்குறிச்சி ஆய்வாளர் ராஜகுமாரி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு காவல் துறையினர் குற்றவாளியை தீவிரமாக தேடி வந்தனர். தொடர்ந்து தனிப்படையினர் ஈரோட்டில் வைத்து 9 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த இன்பராஜை கைது செய்து அழைத்து வந்து சிறையில் அடைத்துள்ளனர்.
அப்போது விசாரணையில் திடுக்கிடும் தகவல்களும் வெளியாகியுள்ளது. அதாவது இன்பராஜ் தற்போது ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளில் வசித்து வருகிறார். ஆனால் இவருக்கு ஆதார், வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை உள்பட எவ்வித அடையாள அட்டையும் கிடையாது. இவருக்கு நிரந்தர முகவரியும் கிடையாது என்பது தெரிய வந்தது. மேலும் இவர் திருட்டு பழக்கம் உடையவர் என்பதும், பல்வேறு காவல் நிலையங்களில் இவர் மீது அடிதடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
மேலும் ஒவ்வொரு காவல்நிலையத்திலும் வெவ்வேறு பெயர்களை கொடுத்து தொடர்ந்து தலைமறைவாகி வந்ததாக காவல் துறையினர் தரப்பில் தெரிவித்தனர்.