நெல்லை செப், 12
காற்று மாசுபாடு குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்துவதற்காக கடந்த 2020-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7 ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது.
வருகிற 2030-ம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள வேதிப்பொருட்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் நோய்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து அதன் மூலம் அனைவருக்கும் சுத்தமான காற்று கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
அதன்படி இந்த ஆண்டும் தூய காட்சி தினம் கொண்டாடப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடந்த நிகழ்ச்சியில் நீல வானத்திற்கான சர்வதேச தூய காற்று தினத்தின் கருப்பொருளான தூய காற்றினை நாம் அனைவரும் பெறுவோம் என்பதை வலியுறுத்தி கலெக்டர் விஷ்ணு தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த விழிப்புணர்வு வாகனத்தையும் ஆட்சியர் விஷ்ணு கொடியை சேர்த்து தொடங்கி வைத்தார். பின்னர் தூய காற்றின் அவசியம் குறித்த துண்டு பிரசுரங்களையும் அவர் வழங்கினார்.