நெல்லை ஆக, 25
நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
தமிழ்நாடு, தொழில் முதலீட்டு கழகத்தின் நெல்லை மண்டலம் சார்பில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கான சிறப்பு தொழில் கடன் விழா நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் 27 ம் தேதி நடைபெற உள்ளது.
தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவதற்கும், பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கி வருகிறது.
அதன்படி இந்த சிறப்பு தொழில்கடன் முகாமில் தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள், அரசு மானியங்கள், புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட உள்ளது.
தகுதி பெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் அதிகபட்சமாக ரூ.1.50 கோடி வரை வழங்கப்படும். புதிய தொழில்முனைவோர், தொழிலதிபர்கள், தொழில் திட்டங்களுடன் கலந்து கொண்டு தொழில் கடன் மற்றும் அரசின் மானிய சேவைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.