Spread the love

சென்னை டிச, 24

தமிழ் திரை உலகின் மன்னாதி மன்னனாக திகழ்ந்து தமிழ்நாட்டின் முதல்வராக 10 ஆண்டுகள் பதவி வகித்து மக்களின் மனதில் அன்றைக்கும் இன்றைக்கும் நீங்காத தனிப்பெரும் தலைவராக நிற்கும் அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆரின் 36வது நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

சினிமாவில் தனிப்பெரும் ஹீரோவாக திகழ்ந்த எம்ஜிஆர் உழைக்கும் மக்கள், விவசாயிகள், மீனவர்கள், காவல்துறையினருக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் கதைக்களங்களைத் தேர்வு செய்தார்.

வயதானவர்கள்,பெண்கள் மீதான எம்ஜிஆரின் உயர்ந்த கருத்துக்கு, தாய்க்குலத்திடம் வரவேற்பு அதிகரித்தது.

குழந்தைகள் மீது அதிக பிரியம் கொண்ட எம்ஜிஆரின் படங்களுக்கு ரசிகர்களும் ஏராளம். நல்ல கருத்துக்களை, தன் படங்களில் அவர் சொல்லத் தவறியதில்லை. நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால் இங்கு ஏழைகள் வேதனைப் படமாட்டார் என்று தனது திரைப்படங்களில் பாடல்களின் மூலம் அரசியல் கருத்துக்களை வெளிப்படுத்தினார்.

எம்.ஜி.ஆரின் இயல்பிலும் சுபாவத்திலும் கருணை குணம், துணிச்சல், சிந்தனைத் தெளிவு போன்றவை தான் அரசியலுக்கு வர அடித்தளமாக அமைந்தது. அண்ணாவின் தலைமையில் திராவிட முன்னேற்றக்கழக கட்சியில் இணைந்து பணியாற்றினார். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு முதல்வராக பதவியேற்ற கருணாநிதியிடம் கருத்து வேறுபாடு ஏற்படவே கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.

அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் என்ற கட்சியைத் தொடங்கி தனிப்பெரும் வெற்றி பெற்றார். தமிழகத்தின் முதல்வராக பத்து ஆண்டுகள் பதவி வகித்தார். ஏழை மக்கள் மீது அவர் அதிக அக்கறை கொண்டிருந்த எம்ஜிஆர் அவர்களுக்காக பல நல திட்டங்களைக் கொண்டு வந்தார்.

பசியிலும் வறுமையிலும் தான் வாடியது போல், பிள்ளைகள் பசியோடிருக்கக் கூடாது என பள்ளிக்குழந்தைகளுக்கு சத்துணவுத் திட்டத்தை அமல்படுத்தினார். மக்களின் மனதில் நீங்காத தலைவராக இடம் பெற்றிருந்த எம்ஜிஆர் கடந்த 1987, டிசம்பர் 24ம் தேதி இவ்வுலகைவிட்டு மறைந்தார். அவரது உடல் மெரீனா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே வைக்கப்பட்டு நினைவிடம் எழுப்பப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *