தேனி ஜன, 28
தேனி அல்லிநகரம் சிட்டுப்பிள்ளை தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (62) எலக்ட்ரீசியன். இவர் பழனிசெட்டிபட்டியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வீடு கட்டுவதற்காக 2 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3 லட்சம் கடன் வாங்கியுள்ளார். மாதம் ரூ. 8 ஆயிரம் வீதம் திருப்பிச்செலுத்தி வந்துள்ளார். 8 தவணைக்கான பணத்தை அந்நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியரிடம் கொடுத்துள்ளதாக தெரிகிறது.
மேலும் அவர் ரசீது தரவில்லை. இதனால் அந்நிறுவனத்திற்கு சென்று ரசீது கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியரை வேலையை விட்டு நிறுத்தி விட்டோம் என கூறியுள்ளனர். தனது பணத்தை மீட்டுத்தரக்கோரி நிறுவனத்திடமும், காவல் துறையினரிடமும் 6 மாதங்களுக்கு முன்பு புகார் செய்தும் நடவடிக்கை இல்லை என்று தெரிகிறது. மீதமுள்ள ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்தை அந்நிறுவனத்தில் செலுத்த சென்றுள்ளார். அங்கு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் கடன் நிலுவையில் உள்ளதாக கூறியுள்ளனர்.
இதில் மனமுடைந்த சுப்பிரமணி நிறுவனத்தின் முன்பாக பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இந்த தகவலை அறிந்த பழனிசெட்டிபட்டி காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். மயங்கி விழுந்த சுப்பிரமணியை தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து பழனி செட்டிபட்டி காவல் துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.