நீலகிரி ஜன, 18
குன்னூரில் பல்வேறு இடங்களில் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. காந்திபுரம் இந்திரா நகரில் நாகம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் 18-வது ஆண்டு பொங்கல் திருவிழா நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தந்தி மாரியம்மன் கோவிலில் இருந்து செண்டை மேளம் முழங்க அம்மன் திருவீதி உலா நடைபெற்றது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் விநாயகர், முருகப்பெருமான், ஆஞ்சநேயர், பத்ரகாளி, பெருமாள் போன்ற சாமி வேடங்கள் அணிந்து பக்தர்கள் ஆடல், பாடலுடன் ஊர்வலமாக வந்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.