குற்றாலம் ஆகஸ்ட், 7
குற்றாலத்தில் நடைபெற்று வரும் சாரல் திருவிழாவை முன்னிட்டு கலைவாணர் கலையரங்கில் நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. கால்நடை பராமரிப்பு துறை மண்டல துணை இயக்குனர் தியோ பிலஸ் ரோஜர் தலைமை தாங்கினார்.
இந்தக் கண்காட்சியில் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், கன்னியாகுமரி, மதுரை மாவட்டங்களை சேர்ந்த கன்னி, சிப்பி பாறை, ராஜபாளையம், கோம்பை, ஜெர்மன் ஷெப்பர்ட், லேப்ரடார், பொமேரியன் உள்பட 24 வகையான 220 நாய்கள் கலந்து கொண்டன.
மேலும் சங்கரன்கோவில் கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் டாக்டர் ரஹ்மத்துல்லா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
நாட்டின நாய்கள் மற்றும் அயல் இன நாய்களுக்கு தனித்தனியே ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் சிறப்பு பரிசாக வழங்கப்பட்டது. மேலும் கலந்து கொண்ட அனைத்து நாய்களுக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்த கண்காட்சியில் நடுவர்களாக டாக்டர்கள் கருப்பு துரை, பாலமுருகன் ஆகியோர் செயல்பட்டனர். ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை நாட்டின நாய்கள் பிரிவில் சிதம்பராபுரத்தைச் சேர்ந்த பெரியசாமி என்பவரின் கன்னி இன நாய்க்கு கிடைத்தது. அயல் இன நாய்கள் பிரிவில் இலஞ்சியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவரது ஜெர்மன் ஷெப்பர்ட் என்ற நாய்க்கு கிடைத்தது. ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பரிசை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் வழங்கினார்.
இதற்கான ஏற்பாடுகளை கால்நடை பராமரிப்புத்துறை தென்காசி கோட்ட உதவி இயக்குனர் மகேஸ்வரி தலைமையில் கால்நடை உதவி டாக்டர்கள், ஆய்வாளர்கள், பராமரிப்பு உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் செய்திருந்தனர்.
மேலும் செய்திகளை உடனே படிக்க.
http://www.vanakambharatham24x7news.in