ஆமதாபாத் நவ, 6
குஜராத் சட்டசபையின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அங்கு தேர்தல் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டது.
அதன்படி டிசம்பர் 1 மற்றும் 5 ம் தேதிகளில் குஜராத்தில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. தேர்தல் அறிவிப்பு வெளியானதும் அரசியல் கட்சிகள் அனைத்தும் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன.குஜராத் மாநிலத்தில் 182 தொகுதிகள் உள்ளன. கடந்த தேர்தலில் இங்கு பாரதிய ஜனதாவும், காங்கிரஸ் கட்சியுமே பிரதான கட்சிகளாக களம் இறங்கியது.
இதில் பாரதிய ஜனதா 99 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கட்சிக்கு 77 இடங்கள் கிடைத்தன.இதற்காக பிரதமர் மோடி தனது சொந்த மாநிலம் குஜராத்தில் இன்று முதல் பிரசாரம் செய்ய உள்ளார். அவரது தேர்தல் பிரசாரம் பற்றி பாரதிய ஜனதா பிரமுகர்கள் கூறும்போது, பிரதமர் மோடி இன்று குஜராத் வருகிறார். அவருக்கு பாரதிய ஜனதா சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.
குஜராத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியான பின்பு அங்கு இன்று தான் பிரதமர் மோடி பிரசாரத்திற்கு செல்கிறார்.பிரதமர் மோடி முதல் முறையாக இன்று பிரசாரம் தொடங்க இருப்பதை தொடர்ந்து அங்குள்ள பாரதிய ஜனதா தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.