திருப்பத்தூர் அக், 31
திருப்பத்தூர் மாவட்டத்தில் வீடுகளில் உரங்களை பதுக்கி விற்பனை செய்தால் அவர்களின் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது,
திருப்பத்தூர் மாவட்டத்தில் சில இடங்களில் உரங்களை கடையில் வைத்து விற்பனை செய்யாமல் வீடுகளில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாகவும், இதனால் அதன் அருகில் வசிப்பவர்களுக்கு பல்வேறு உடல் நலக் குறைவுகள் ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். அதைத்தொடர்ந்து இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார். அதன்படி மாவட்டத்தில் எங்காவது வீடுகளில் உரங்களை பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரிந்தால் அந்த நபர்கள் குறித்த தகவல்களை உடனடியாக அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு தெரிவிக்கலாம் என கூறியுள்ளார்.