ஜோலார்பேட்டை அக், 29
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த கேத்தாண்டப்பட்டி ஊராட்சியில் உள்ள பொதுமக்கள் விவசாயத் தொழில் செய்தும், ஆடு, மாடு, கோழி போன்றவைகளை பராமரித்து தங்களின் வாழ்வாதாரத்தை பெருக்கி வருகின்றனர். இந்நிலையில் இங்குள்ள பொதுமக்கள் வளர்க்கப்படும் கால்நடைகள் நோய்வாய்ப்பட்டு அதிக அளவில் இறந்து விடுகிறது. கால்நடை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டுமென்றால் அருகாமையில் உள்ள ஜோலார்பேட்டைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதனால் இங்குள்ள பொதுமக்கள் கேத்தாண்டப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களின் கால்நடைகளை பாதுகாத்துக் கொள்ள கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும் என தேவராஜி சட்ட மன்ற உறுப்பினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் கால்நடை மருத்துவமனை அமைக்க ஜெயசீலன் வட்டத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கட்டிடப் பணிக்கு ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருத்துவமனை கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு செயற்பொறியாளர் சுபஸ்ரீ தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் முரளி சதானந்தம் வரவேற்றார். மத்திய ஒன்றிய செயலாளர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் உமா கன்ரங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் தே. பிரபாகரன், உதவி பொறியாளர் பழனி, உதவி செய்ய பொறியாளர் தேவன் உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.