குஜராத் அக், 31
குஜராத் மாநிலம், மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஒரு கேபிள் பாலம் அமைக்கப்பட்டு அதை மக்கள் இன்றளவும் பயன்படுத்தி வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்று வரும் இந்த பாலத்தை அன்மையில் புணரமைத்த குஜராத் அரசு, 5 நாள்களுக்கு முன்னர் தான் மீண்டும் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தது.
இந்த நிலையில் நேற்று வார விடுமுறை என்பதால் வழக்கத்தை விட அதிக மக்கள் இந்த பாலத்தில் பயணிக்க வந்துள்ளனர். இதையடுத்து நேற்று மாலை நூற்றுக்கணக்கானோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்த போது யாரும் எதிர்பாராத விதமாக பாலத்தின் கேபிள் அறுந்து ஆற்றுக்குள் விழுந்தது.
இந்த விபத்து காரணமாக பாலத்தில் இருந்து ஆற்றில் மூழ்கி பலர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சுமார் 400 பேர் இந்த பாலத்தில் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 68 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில உள்துறை அமைச்சர் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார். பலர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றுவருகின்றனர். நீரில் மூழ்கி மாயமான பலரை மீட்க பேரிடர் மீட்பு குழு பல குழுக்களாக பிரிந்து மும்முரமாக செயல்பட்டு வருகிறது.