சிம்லா அக், 28
இமாச்சலபிரதேச மாநில சட்டசபைக்கு அடுத்த மாதம் 12 ம்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு பாரதியஜனதா, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியான பாரதியஜனதா கட்சியில் பலரும் போட்டி வேட்பாளராக களம் இறங்கி இருப்பதால் தேர்தல் களத்தில் அனல் பறக்கிறது.
இந்தநிலையில் பிரதமர் மோடி பாரதியஜனதா கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இமாச்சல பிரதேச்தில் 5 நாட்கள் பிரசாரம் செய்ய திட்டமிட்டு உள்ளார். வருகிற 5 ம்தேதி முதல் 9 ம்தேதி வரை தொடர்ந்து அவர் இமாச்சல பிரதேசத்துக்கு செல்ல இருக்கிறார்.
அங்கு சிம்லா, ஹமீர்பூர், ஹங்ரா, மண்டி ஆகிய நகரங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளார். மேலும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோரும் பிரசாரம் செய்ய உள்ளனர். மத்தியஅமைச்சர்களும் இமாச்சல பிரதேசத்துக்கு செல்ல உள்ளனர். காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரியங்கா ஏற்கனவே தீவிர பிரசாரத்தில் உள்ளார். ஆம் ஆத்மி வேட்பாளர்களை ஆதரித்து கெஜ்ரிவாலும் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதனால் இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது.