மதுரை அக், 28
மதுரை மாவட்டம், தெப்பக்குளம், மருது பாண்டியர் நகரில் வசித்து வருபவர் சிவா. இவர் பிறந்த 6 மாதத்திலேயே போலியோவால் கால் பாதிக்கப்பட்டு சரியாக நடக்க முடியாமல் போனது.
சிறுவயது முதல் கிரிக்கெட் மீது ஆர்வம் கொண்ட இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து விளையாடி வந்தார். பல நேரங்களில் புறக்கணிக்கப்பட்டாலும் அதை பொருட்படுத்தாமல் விளையாட்டிலேயே முழு கவனம் செலுத்தியுள்ளார். சிவாவை அவரது நண்பர்கள் ‘சச்சின்’ சிவா என அழைக்கத் தொடங்க இன்று அதுவே அவரது அடையாளமாக உள்ளது.
பள்ளி, கல்லூரி என தனது கிரிக்கெட் பயணத்தை தொடர்ந்த சச்சின் சிவாவிற்கு மாற்றுத்திறனாளிகள் கிரிக்கெட் பற்றி 2013 ல் தெரியவந்தது. இதனையடுத்து தனது சொந்த முயற்சியால் தமிழக அணியில் இடம்பிடித்த சிவா, குறுகிய காலத்திலேயே தமிழக அணியை வழிநடத்தும் வாய்ப்பை பெற்றார். இதனையடுத்து 2016ஆம் ஆண்டு இந்திய மாற்றுத்திறனாளிகள் அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.
அதில் சிறப்பாக விளையாடி 2019ஆம் ஆண்டு வைஸ் கேப்டனாக உயர்ந்தார். கடந்த 3 ஆண்டுகளாக வைஸ் கேப்டனாக அவர் புரிந்த சாதனைகள் அடிப்படையில் அவர் தற்போது கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகமாக அரை சதம் அடித்தது மற்றும் அதிக ரன்கள் குவித்தது என பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார் சச்சின் சிவா.
தமிழ்நாட்டை சேர்ந்த சச்சின் சிவா இந்திய மாற்றுத்திறனாளிகளின் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதற்கு மதுரை பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் உட்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.