Spread the love

செங்கல்பட்டு அக், 27

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலி குப்பத்தில் 250 மீனவ குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மீனவர்கள் தினமும் 60 படகில் சென்று மீன்பிடித்து வருவது வழக்கம். இந்த பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடும் மீனவர்கள் 20 ஆண்டுகளாக தங்கள் வாழ்வாதாரத்தை காக்க வேண்டி, 500 மீட்டர் பரப்பளவு உள்ள இந்த பகுதி கடற்கரையில் தூண்டில் வளைவுகள் அமைக்க வேண்டும் என்று கடந்த பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மேலும் தூண்டில் வளைவு அமைக்க கோரி பலமுறை மீன்வளத்துறை இயக்குனர், மாவட்ட ஆட்சியர், மீன் வளத்துறை அமைச்சர் ஆகியோரிடம் முறையிட்டு, மனு வழங்கியும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் சமீபத்தில் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள 11 மீனவ கிராமங்களுக்கு தூண்டில் வளைவு அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், அதில் பல ஆண்டுகளாக தூண்டில் வளைவு அமைக்க கோரி கோரிக்கை எழுப்பி வரும் நெம்மேலி குப்பம் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டு உள்ளதாகவும், அதனால் உடனடியாக தங்கள் பகுதிக்கும் தூண்டில் வளைவு அமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து, 11 மீனவ கிராமங்களை போன்று நெம்மேலி குப்பத்திற்கும் தூண்டில் வளைவு அமைக்க உடனடியாக தனி அரசாணை வெளியிட கோரிக்கை விடுத்து நேற்று நெம்மேலிகுப்பம் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தத்தில் ஈடுட்டனர்.

அவர்கள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மீனவர்கள் அனைவரும் தங்கள் குடும்பத்துடன் முழங்கால் நீரில் கடலில் இறங்கி தங்கள் கோரிக்கை தொடர்பாக கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *