கடலூர் அக், 26
மந்தாரக்குப்பம் அருகே உள்ள பெரியாக்குறிச்சி, கங்கைகொண்டான் மற்றும் வடக்குவெள்ளூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் ஆய்வு மேற்கொண்டார். இதில் பிரசவ வார்டு உள்பட அனைத்து பகுதிகளுக்கும் சென்று அங்கிருந்த நோயாளிகளிடம் குறைளை கேட்டறிந்தார்.
அப்போது கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் பணிபுரிய மருத்துவர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இதனால் இரவு நேரத்தில் பொதுமக்கள் அங்கு சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டு வருவதால் அவர்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதைத் தவிர்க்க இரவு நேரத்தில் பணிபுரிய மருத்துவர்களை நியமனம் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை கேட்டறிந்த ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். அப்போது மருத்துவர்கள் சசிகலா, லாவண்யா, அரசு ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் அருண்ராஜ், கங்கைகொண்டான் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் சிவதங்கம், கம்மாபுரம் சுகாதார மேற்பார்வையாளர் பாண்டியராஜன், கங்கைகொண்டான் பேரூராட்சி மன்ற தலைவர் பரிதா அப்பாஸ், ஊராட்சி மன்ற தலைவர் கயல்விழி ராதாகிருஷ்ணன் உள்பட பலர் உடன் இருந்தனர்.