செங்கல்பட்டு அக், 24
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரம் நகரம் சர்வதேச அளவில் யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட உலக புராதன நகரமாக திகழ்வதால் அங்கு நாள்தோறும் ஏராளமான வெளிநாட்டு, உள்நாட்டு பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கட்கிழமை தீபாவளி என தொடர் விடுமுறையின் காரணமாக நேற்று சுற்றுலா பயணிகள் மாமல்லபுரத்தில் குவிந்தனர்.
மேலும் புராதன சின்னங்கள் முன்பு குடும்பம், குடும்பமாக நின்று செல்பி, புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். தொடர் விடுமுறையால் தங்கள் பிள்ளைகளுடன் வந்திருந்த பொற்றோர்கள் அவர்களை மகிழ்விப்பதற்காக அவர்கள் கேட்ட பரிசு பொருட்களையும், தின்பண்டங்களையும் வாங்கி கொடுத்ததை காண முடிந்தது.
மேலும் சுற்றுலா பயணிகள் வருகை அதிகமிருந்த காரணத்தால் சுற்றுலா வழிகாட்டிகள் அனைவருக்கும் பயணிகளுக்கு சுற்றி காட்டும் பணிகள் கிடைத்ததால் அவர்கள் அனைவரும் தங்களுக்கு போதிய வருவாய் கிடைத்ததால் நேற்று மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.