அயோத்தியா அக், 24
உத்தர பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்து மீண்டும் 2-வது முறையாக பாரதிய ஜனதா கட்சி அதிகாரத்திற்கு வந்துள்ள நிலையில், தொடர்ந்து 6-வது முறையாக தீபாவளி பண்டிகையை சிறப்புடன் கொண்டாடுவதற்கான பணிகள் முழுவீச்சில் நடந்தன. முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தர பிரதேச அரசு தீபாவளியை முன்னிட்டு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது.
இதன்படி, அயோத்தியா நகரில் 15 லட்சத்திற்கும் கூடுதலானவிளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. நீண்ட நேரம் எரியும் விளக்குகளை மக்கள் காணலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது. இதற்கு முன்பு, விளக்குகள் விரைவாக அணைந்து விடும். இதனால், விளக்கொளியின் பிரமிப்பை மக்கள் பார்க்க முடியாமல் போனது. விளக்குகள் நீண்ட நேரம் எரிவதற்காக தலா 40 மி.லி. எண்ணெய் விளக்கில் ஊற்றப்படும். இந்த ஆண்டில் 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகள் ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு உள்ளது.
இந்த வரலாற்று நிகழ்ச்சி பிரதமர் மோடி, ஆயிரக்கணக்கான பக்தர்கள், பொது மக்கள் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது. பிரதமர் மோடி, விழாவை தொடங்கி வைத்ததும் விளக்குகளை ஏற்றும் பணி தொடங்கியது. இந்த சாதனையை படைப்பதில், ஆவாத் பல்கலை கழகத்தின் மாணவ மாணவியர்கள் மற்றும் பேராசிரியர்கள் பலரும் பெருமளவில் பங்காற்றினார்கள்.
இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில், கின்னஸ் உலக சாதனை பதிவுகள் அமைப்பின் பிரதிநிதிகள் அறிவிப்பு வெளியிட்டனர். இதற்கான சான்றிதழ் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் வழங்கப்பட்டது. இந்த சாதனைக்காக அவருக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.