நெல்லை அக், 19
சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் ஓ.பன்னீர்செல்வம் இருக்கை விவகாரத்தில் சபாநாயகர் முடிவை கண்டித்து எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்கள் இன்று சென்னையில் ஒருநாள் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை. இதைத்தொடர்ந்து தர்ணாவில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி உள்பட அதிமுக. உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்து நெல்லை வண்ணார்பேட்டையில் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதில் அமைப்பு செயலாளர்கள் கருப்பசாமி பாண்டியன், சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி நாராயணன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சவுந்தரபாண்டியன், முத்துக்கருப்பன், உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தற்போது வண்ணார்பேட்டை, முருகன்குறிச்சி பகுதியில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது.
இந்நிலையில் சாலை மறியலால் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதையடுத்து மாநகர துணை காவல் ஆணையர் சீனிவாசன் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக மறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்ளிட்ட 200 பேரை காவல்துறையினர் கைது செய்து கொக்கிரகுளத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.