Spread the love

நெல்லை அக், 18

தென் மாவட்டங்களில் மிகவும் புகழ்பெற்ற கால்நடை சந்தைகளில் நெல்லை மேலப்பாளையம் கால்நடை சந்தையும் ஒன்றாகும். இந்த கால்நடை சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும். இதற்காக முந்தைய நாள் இரவிலே வியாபாரிகள் தங்களது ஆடு, மாடு, கோழி ஆகியவற்றை விற்பனைக்காக கொண்டு வந்து விடுவார்கள். இந்த சந்தைக்கு நெல்லை மாவட்டத்தில் சிவந்திப்பட்டி, இட்டேரி, வள்ளியூர், நாங்குநேரி, அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய பகுதிகளில் இருந்தும், தூத்துக்குடி மாவட்டத்தில் கருங்குளம், செய்துங்கநல்லூர், கயத்தாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்தும், தென்காசி மாவட்டத்தில் ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய பகுதிகளில் இருந்தும், விருதுநகர் மாவட்டத்தில் இருந்தும் வியாபாரிகள் தங்களுடைய ஆடுகளை இங்கு கொண்டு வந்து விற்பனை செய்வார்கள்.

தீபாவளி, பக்ரீத் உள்ளிட்ட முக்கிய பண்டிகை காலங்களில் சந்தையில் கூட்டம் அலைமோதுவது வழக்கம்.
இந்த நிலையில் அடுத்த வாரம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி இன்று மேலப்பாளையம் கால்நடை சந்தையில் மாடுகள் வாங்குவதற்கு ஏராளமான மக்கள் திரண்டனர்.
அங்கே சிறிய ஆட்டுக்குட்டிகள் 3000 ரூபாய் முதல் விற்பனையானது. பெரிய ஆடுகள் ரூ.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டது.

இன்று ஒரே நாளில் மட்டும் சுமார் ரூ.4 கோடிக்கு கால்நடை விற்பனை நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆடுகளை விற்பனை செய்ய வந்த வியாபாரிகள் கூறும் போது, இந்த ஆண்டு அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்துள்ளதால் ஆடுகளை மிக குறைந்த விலைக்கு இறைச்சி கடைக்காரர்கள் கேட்கிறார்கள். நாங்கள் காலையிலேயே இங்கு வந்து விட்டோம். இதுவரை ஆடுகள் விற்பனை செய்யாமல் இங்கே நிற்கிறோம் என தெரிவித்தனர்.
ஆடுகளை வாங்க வந்தவர்கள் கூறும்போது, “இந்த ஆண்டு ஆடு விற்பனை அமோகமாக உள்ளது. ஆடுகள் ரூ‌.45 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தீபாவளி பண்டிகை நெருங்குவதால் இறைச்சி வியாபாரம் நன்றாக இருக்கும். எனவே விலையைப் பற்றி கவலைப்படாமல் வாங்கிச் செல்கிறோம்” என தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *