தூத்துக்குடி ஆகஸ்ட், 4
மணியாச்சி புதிய காவல் துணை கண்காணிப்பாளராக லோகேஸ்வரன் பொறுப்பேற்றுக் கொண்டார். முதலில் காவல் துணை கண்காணிப்பாளராக இருந்த சங்கர் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவருக்கு பதிலாக டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற லோகேஸ்வரன் புதிய காவல் துணை கண்காணிப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.
இவர் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர். பட்டுக்கோட்டையில் 2 ஆண்டுகள் பயிற்சி துணை கண்காணிப்பாளராக பணியாற்றினார். தற்போது மணியாச்சியில் 24-வது காவல் துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
மேலும் அவர் கூறுகையில், மணியாச்சி காவல் உட்கோட்ட பகுதியில் வழிப்பறி, கொள்ளை, கொலை உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர் மீதும் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பள்ளி மற்றும் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். குழந்தை திருமணத்தை தடுக்க 1098 போன் நம்பரை அனைத்துப் பள்ளி மாணவ-மாணவிகள் தெரிந்து கொள்ளும் அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். காவல் நிலையங்களில் பொதுமக்களுக்கு தீர்வு கிடைக்காத பட்சத்தில் என்னை நேரில் வந்து சந்தித்து தீர்வு காணலாம், என்றார்.