நெல்லை அக், 15
நெல்லையின் அடையாளங்களின் ஒன்றாக திகழ்வது சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலம். பழமை வாய்ந்த இந்தப் பாலத்தின் மேல்பகுதியின் வழியாக தினமும் லட்சக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
அதேபோல் கீழ்பாலத்தின் வழியாக மோட்டார் சைக்கிள் மற்றும் கார்கள் சென்று வருகிறது. இந்நிலையில் கீழ்பாலத்தின் இருபுற சுவர்களிலும் ஏராளமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டு வருவதாகவும், இதனால் பாலம் தூய்மையின்றி காணப்படுவதாகவும் மாநகராட்சிக்கு சமூகஆர்வலர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.
மேலும் கீழ்பாலத்தில் மின்விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் பாலம் இருள்சூழ்ந்து காணப்படுவதாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து பாலத்தினை தூய்மை செய்ய ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார். அதன்பேரில் பாலத்தில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் அகற்றப்பட்டது. மேலும் போஸ்டர்கள் ஒட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்யப்பட்டது. தொடர்ந்து கீழ்பாலத்தில் மின்விளக்குகள் சீரமைக்கப்பட்டது.
இந்நிலையில் கீழ்பாலத்தின் இருபுறங்களிலும் அப்பகுதியினர் குப்பைகளை கொட்டி வருகின்றனர். இதனால் அந்தப்பகுதி குப்பை மேடாக காட்சி அளிக்கிறது. இந்த குப்பைகளில் நேற்று மர்மநபர்கள் தீ வைத்து சென்றனர். அப்போது காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மளமளவென எரிந்தது. தகவலறிந்ததும் ஆணையர் உத்தரவின் பேரில் தச்சை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று தீ யை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேம்பாலத்தின் வழியாக ஏராளமான வாகனங்கள் சென்றுவரும் நிலையில் தீ அணைக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.