Spread the love

நெல்லை அக், 11

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வ.உ.சி மைதானம், மாவட்டத்தின் விளையாட்டு வீரர்களுக்கு முக்கிய களமாக இருந்து வருகிறது. இந்த மைதானம் நெல்லை மாநகராட்சியின் சீர்மிகு நகர் திட்டத்தின் கீழ், சுமார் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டது.

கடந்த மாதம் நெல்லை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்த புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தை திறந்து வைத்தார். இவ்வாறு புதுப்பிக்கப்பட்ட வ.உ.சி மைதானத்தில், அக்டோபர் 9 முதல் போட்டியாக எழுவர் ஆண்கள் அதிவிரைவு கால்பந்து போட்டி நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு, மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த நிலையில் மைதானத்தின் கழிவறைகளில் போதை மருந்து ஊசிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. முக்கியமாக அஸ்திமின் (astymin), விஐடி பி-12 மற்றும் அமினோ ஆசிட் (VIT B12 and Aminoacids) மற்றும் ரினர்வ் பிளஸ் (renerve plus) ஆகிய மூன்று ஊக்க மருந்துகளின் பயன்படுத்தப்பட்ட கவர்களும் ஊசிகளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்துள்ளன.

இதனை நேற்று நடைபெற்ற கால்பந்து போட்டியின்போது வீரர்கள் பயன்படுத்தினார்களா அல்லது ஏற்கெனவே வெளியூர்களில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்க சென்ற வீரர்கள் பயன்படுத்தினார்களா என கேள்வி எழுந்துள்ளது. விளையாட்டு வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்துவது சட்டப்படி குற்றம் என்றபோது, நெல்லை மாவட்டத்தில் அரசு மைதானத்தில் ஊக்க மருந்துகள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் இதுகுறித்து முறையான விசாரணை நடத்த வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *