திருச்சி அக், 11
உப்பிலியபுரம் ஒன்றியம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் குஞ்சம்மாள். இவர் தனது மகள் இந்திராணி, பேத்தி சரண்யா, பேரன் பிரபுவுடன் வசித்து வருகிறார்.
சம்பவத்தன்று குஞ்சம்மாளை தவிர வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வீட்டிற்கு வந்த மர்ம நபர், குஞ்சம்மாளிடம், எலெக்ட்ரிக் வேலை பார்ப்பதற்காக அவரது பேரன் அனுப்பியதாக கூறியுள்ளார். இதையடுத்து வீட்டில் பீரோவின் மேல் இருந்த சாவியை எடுத்து, பீரோவில் இருந்த தங்கச்சங்கிலி, மோதிரம், தோடு உள்பட 7 பவுன் நகைகளை அந்த நபர் கொள்ளையடித்து சென்றதாக கூறப்படுகிறது. பீரோ திறந்த நிலையில் இருந்ததை பார்த்த குஞ்சம்மாள், மகளுக்கு தகவல் அளித்தார்.
இதையடுத்து அங்கு வந்த சரண்யா வீட்டில் இருந்த நகைகளை மர்ம நபர் திருடிச் சென்றதை அறிந்து, உப்பிலியபுரம் காவல் துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் துணை ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இது குறித்து உப்பிலியபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபரை தேடி வருகின்றனர்.